விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
வேடசந்தூர் அருகே விவசாயிகளுக்கு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பயிற்சி முகாம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை ஊராட்சி புதுரோடு சமுதாய கூடத்தில் நடந்தது. முகாம் தொடக்க விழாவுக்கு நாகையகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்வடிவு இளங்கோவன் தலைமை தாங்கினார்.
முகாமில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் சரவணன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் குழந்தைராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் மற்றும் அதிக லாபம் தரும் பயிர்கள் குறித்து பேசினர். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில், வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். முன்னதாக விவசாய சங்க தலைவர் சவடமுத்து வரவேற்றார். முடிவில் பயிற்சி பொறுப்பாளர் திவான்ஸ்டின் நன்றி கூறினார்.