பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
காலை சிற்றுண்டி திட்ட பணியாளர்களுக்கு நத்தத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் நத்தம் ஒன்றிய அளவில் 98 கிராம பள்ளிகளுக்கும், பேரூராட்சி பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கும் தலா 3 பேர் வீதம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் திருமலைசாமி, சத்துணவு மேலாளர் முகமது சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டியை சுகாதாரமான முறையில் சமைப்பது குறித்தும், அதனை பள்ளி குழந்தைகளுக்கு சீராக வழங்குவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் 5 நாட்களும் 5 வகையான சத்துணவு உணவுகள், சாம்பார் வழங்குவது பற்றியும் விளக்கப்பட்டது. முன்னதாக வட்டார இயக்க மேலாளர் விஜயலெட்சுமி வரவேற்றார். முடிவில் உதவியாளர் தேன்மொழி நன்றி கூறினார்.