கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 1-ந் தேதி தொடங்குகிறது.
கோடைகால பயிற்சி முகாம்
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 2 பிரிவுகளாக முகாம் நடைபெறும்.
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, கபடி, வால் சண்டை மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அனைவருக்கும் சான்றிதழ்
இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். அதோடு முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் அலுவலக வேலை நேரத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை நேரடியாகவோ அல்லது dsonmk@gmail.com என்ற இ-மெயில் மூலமோ பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.