தாட்கோ மூலம் அழகு சாதனவியல் பயிற்சி ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

Update: 2023-02-10 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் வழங்கப்படும் அழகு சாதனவியல் பயிற்சியை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அழகு சாதனவியல் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுயதொழில் தொடங்கவும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சியை சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி பெற வேண்டும்.

மானியத்துடன் கடன்

இந்த பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடக்க கால மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.

மேலும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தர்மபுரியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்