'எண்ணும் எழுத்தும்' திட்ட பயிற்சி

Update: 2022-06-06 16:10 GMT

உடுமலை:

உடுமலையில் 1 முதல்3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியது.

எண்ணும் எழுத்தும் திட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1,2,3 ஆகிய வகுப்புகளுக்கு 2022-2023-ம் ஆண்டிலிருந்து "எண்ணும் எழுத்தும்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக ஆசிரியர் திறன்மேம்பாடு குறித்து மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதன்படி, திருப்பூர் மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1 மற்றும் 2 -ந் தேதிகளில் நடந்தது. இதில் மாநில அளவில் பயிற்சிபெற்ற கருத்தாளர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு பயிற்சியளித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு வட்டார அளவில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் மொத்தம் 1866 ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சிகள் நேற்று அந்தந்த வட்டாரங்களில் தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

அதன்படி உடுமலை வட்டார அளவில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்புகள் உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகம், தமிழ் சிறப்பு உத்திகள், பாடல், கலந்துரையாடல், படித்தல், எழுதுதல், தமிழ் மாதிரி வகுப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் பயன்பாடு, எண்ணும் எழுத்தும் தமிழ் ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி நூல், கற்றல் விளைவுகள் அறிமுகம் ஆகியவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 163 ஆசிரியர்கள் பயிற்சிபெற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருமூர்த்திநகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சங்கர் ஆலோசனைப்படி கருத்தாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

இந்த தகவலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சரவணக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்