சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு 7 நிமிடத்தில் முடிந்தது

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு 7 நிமிடத்தில் முடிந்தது

Update: 2023-07-13 19:30 GMT

சேலம்:

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 7 நிமிடத்தில் முடிந்தது. இதனால் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு

நாடு முழுவதும் நவம்பர் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்து வரும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதுண்டு. குறிப்பாக நீண்ட தொலைவில் ரெயில்களில் செல்லவே விரும்புவார்கள். அதாவது, ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அந்த வகையில் தீபாவளிக்கு முந்தைய நாட்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி நவம்பர் 10-ந் தேதி ரெயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி சேலத்தில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் நேற்று அதிகாலை 5 மணிக்கே சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

பயணிகள் ஏமாற்றம்

குறிப்பாக நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு முன்பதிவு செய்தனர். ஆனால் இந்த ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து இருக்கைகளுக்கும் டிக்கெட் முடிந்துவிட்டது. காத்திருப்போர் டிக்கெட் கூட வழங்க முடியாத நிலை (ரிக்ரிட்) ஏற்பட்டது. ஆனால் இந்த ரெயிலுக்கு ஆன்லைனில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் அதிக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ததால் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது. இதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், கோவை, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் ரெயில்களிலும் 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட் முன்பதிவும் தீர்ந்துவிட்டது. ஏற்கனவே நவம்பர் 9-ந் தேதி பயணம் செய்யும் ரெயிலுக்கான முன்பதிவு நேற்று முன்தினம் முடிந்துவிட்டது. அன்றைய நாட்களிலும் பெரும்பாலும் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறப்பு ரெயில்கள்

எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் வழியாக நெல்லை, நாகர்கோவிலுக்கும், பெங்களூருவில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்