25 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் வழியாக ராமேசுவரத்துக்கு ரெயில் இயக்கம்

25 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2022-08-25 17:51 GMT

25 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரெயில் இயக்கம்

தமிழகத்தில் மிகவும் பழமையான மீட்டர்கேஜ் பாதையாக சென்னை-காரைக்குடி-ராமேசுவரம் வழிப்பாதை இருந்தது. இந்த வழிப்பாதையில் ராமேசுவரம், காரைக்குடி வரையில் ஜனதா, கம்பன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிப்பாதையில் நடந்த அகல ரெயில் பாதை பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திராபாத்தில் இருந்து சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வேதுறை அறிவித்தது.

ராமேசுவரத்துக்கு...

அந்த ரெயில் வியாழன் தோறும் காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு திருவாரூருக்கு மதியம் 3.15 மணிக்கு வந்து சேர்கிறது. பின்பு 3.25-க்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரத்துக்கு இரவு 11.40-க்கு சென்றடைகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை ராமேசுவரத்தில் 8.50 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மதியம் 3.15 மணிக்கு வந்து, அங்கிருந்து 3.25-க்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.50-க்கு சென்று சேர்கிறது.

பின்னர் செகந்திராபாத்துக்கு பயணத்தை தொடர்கிறது. இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு பயணிகள் இடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பயணிகள் வரவேற்பு

ரெயில்வே துறையின் அறிவிப்பின்படி நேற்று இரவு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று காலை வந்தடைந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து 9.45 மணிக்கு புறபட்டு திருவாரூருக்கு மதியம் 3.15 மணிக்கு வந்தது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திருவாரூர் ரெயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் பாரதி, இலியாஸ், அக்பர் பாட்ஷா மற்றும் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட இயக்குதல் மேலாளர் வெங்கட்டராகவன் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்