திருமண நாளில் சோகம்:மதுரையில், கண்மாயில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி உயிரை விட்ட வாலிபர்

மதுரையில் கண்மாயில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி மீட்ட வாலிபர் நீச்சல் தெரியாததால் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-29 21:10 GMT


மதுரையில் கண்மாயில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி மீட்ட வாலிபர் நீச்சல் தெரியாததால் பரிதாபமாக இறந்தார்.

மனைவியை அழைத்து வர சென்றார்

மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள ராஜா குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் முத்துக்குமார் (வயது 36). தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு செல்லத்தாய் (28) என்ற மனைவியும், மாறன்(5), இனியவன்(3) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்ற மனைவி, குழந்தைகளை அழைத்து வர மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் முத்துக்குமார் சென்றார்.

மூழ்கிய சிறுவன்... காப்பாற்றிய வாலிபர்

அப்போது கருப்பாயூரணி கண்மாயில் சிறுவர்கள் 4 பேர் குளித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.

இதனால் அவர் உடனே வண்டியை நிறுத்திவிட்டு தண்ணீரில் குதித்து அந்த சிறுவனை காப்பாற்றினார். ஆனால் முத்துக்குமார் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுவர்கள் கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்

திருமண நாளில் சோகம்

மேலும் தல்லாகுளம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த முத்துக்குமார் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் ஊரில் இருந்து வந்த அவரது மனைவி, குழந்தைகள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முத்துக்குமார் உடலைக் கண்டு கதறி அழுதனர். மேலும் திருமண நாள் என்பதால் கணவரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்ததாகவும், அவருக்கு நீச்சல் தெரியாது என்றும் அவருடைய மனைவி செல்லத்தாய் கதறியபடியே போலீசாரிடம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்