கயத்தாறு அருகே பரிதாபம்: பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை

கயத்தாறு அருகே பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-10 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே, ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவருடைய மகள் உமா மகேஸ்வரி (வயது 34). இவர் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பாண்டித்துரை தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பரமசிவம் (36) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பரமசிவம் பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார்.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 4 ஆண்டுகளாக உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு கோனார்கோட்டை கிராமத்தில் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி வீட்டில் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல்அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உமாமகேஸ்வரி உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி தீலீப் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்த உமா மகேஸ்வரிக்கு 6 வயதில் தக்ஸதா என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்