புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டி வழியாகசந்தன மரக்கட்டைகள் கடத்தல்தொழிலாளியை கைது செய்து போலீஸ் விசாரணை

புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டி வழியாக சந்தன மரக்கட்டைகள் கடத்தியதாக கூலி தொழிலாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-13 18:45 GMT


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் அன்பரசன், ராஜசேகர், பனையபுரம் சோதனை சாவடி போலீஸ்காரர்கள் செந்தில், கோபி, கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பனையபுரம் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அவர் எடுத்து வந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் சுமார் 7 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டை துண்டு துண்டாக இருந்தது தெரியவந்தது.

பணம் தருவதாக கொடுத்து அனுப்பினார்

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் புதுச்சேரி மாநிலம் சோரப்பட்டு மூகாம்பிகை நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (வயது 52) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் கூறுகையில், தன்னிடம் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், சந்தன மரக்கட்டைகள் இருந்த பையை கொடு்த்து அனுப்பினார். விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றவுடன் தனக்கு போன் செய்யுமாறு கூறினார்.

அவ்வாறு போன் செய்தவுடன், அங்கு வரும் ஒருவரிடம் பையை ஒப்படைத்துவிட்டு வந்தால், அதற்கு கூலியாக பணம் தருவதாக அந்த நபர் தன்னிடம் கூறினார். அதன் பேரில் தான் அந்த பையை பனையபுரத்துக்கு எடுத்து வந்ததாக சுப்பிரமணி போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் 2 பேர் யார்?

தொடர்ந்து அவர் கூறிய செல்போன் எண்ணை பெற்று போலீசார் போன் செய்தனர். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக வந்தது. இதையடுத்து சுப்பிரமணியனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, விழுப்புரம் வன சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சுப்பிரமணியிடம் சந்தன மரக்கட்டையை கொடுத்து அனுப்பியது யார்? அதை பெற்றுக்கொள்ள வர இருந்ததாக கூறப்படும் நபர் யார்? என்பது குறித்தும், எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்