டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசல் கண்காணிக்கப்படும்; போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Update: 2023-03-15 23:21 GMT

சென்னை,

சென்னையில் ரிமோட் மூலம் செயல்படும் நவீன சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில், சென்னை போக்குவரத்து போலீசுக்கு பல்வேறு நவீன வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் ஆகும். அவசர வேளைகளில் சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது, சிக்னலை மாற்றி வழி விடவேண்டும். போக்குவரத்து போலீசார் அருகில் இல்லாதபோது, சிக்னலை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இதுபோன்ற நேரத்தில் ரிமோட் மூலம் சிக்னலை உடனே மாற்றி விடலாம். அதனால் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர கார், மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் அதிவேகமாக சென்றால், அவற்றின் வேகத்தை கணக்கிட்டு அபராத தொகை தொகை விதிக்கும் 6 கருவிகளின் திரைகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

டிரோன் மூலம்...

மேலும் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால், போக்குவரத்து போலீசாருக்கு இலவசமாக குளிர்ச்சியான மோர் தினமும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சிசரத்கர், இணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்