ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரும்பை தேடி யானைகள்
தாளவாடியை அடுத்த ஆசனூரில் வனப்பகுதிக்குள் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் அடிக்கடி யானைகள் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும். அதனால் இந்த வழியாக செல்லும் கரும்பு லாரிகளின் டிரைவர்கள், யானைகளுக்காக கரும்பு கட்டுகளை ரோட்டு ஓரம் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
இதன்காரணமாக யானைகள் கரும்புகளை சுவைப்பதற்காக அடிக்கடி சாலை ஓரத்துக்கு வந்துவிடுகின்றன. சில நேரங்களில் கரும்புகள் உள்ளனவா? என்று மற்ற லாரிகளையும் மறித்துவிடுகின்றன. இதுபோன்ற சம்பவத்தால் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
வாகனங்களை மறித்தது
இந்த நிலையில் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய வாகனங்கள் வருகின்றனவா? என்று நேற்று 2 யானைகள் நெடுஞ்சாலை ஓரம் காத்திருந்தன.
அப்போது பாரம் ஏற்றிய ஒரு லாரியும், அதன்பின்னால் பயணிகளுடன் ஒரு பஸ்சும் வந்தது. அப்போது நின்றுகொண்டு இருந்த 2 யானைகளில் ஒரு யானை மட்டும் நடுரோட்டுக்கு வந்து பாரம் ஏற்றிய லாரியை மறித்தது. பின்னர் லாரியை சுற்றிவந்து கரும்பு கட்டுகள் இருக்கின்றனவா? என்று பார்த்தது. கரும்புகள் இல்லாததால் பின்னால் நின்றுகொண்டு இருந்த பஸ் நோக்கி சென்றது.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பயணிகள் ஓ வென அலறினார்கள். பலர் செல்போனில் படம் பிடித்தார்கள். ஆனால் யானை யாரையும் எதுவும் செய்யவில்லை. சுமார் 15 நிமிடம் ரோட்டிலேயே நின்றது.
அதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. அதன்பின்னர் யானைகள் காட்டுக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.