சோதனை அடிப்படையில் மதுரை-நத்தம் சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் - பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் கருத்து
சோதனை அடிப்படையில் மதுரை-நத்தம் சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து நேற்று தொடங்கியது.
சோதனை அடிப்படையில் மதுரை-நத்தம் சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து நேற்று தொடங்கியது.
நான்குவழிச்சாலை
சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் வழியாக மதுரைக்கு வருகின்றன. அதே போல் மறுமார்க்கத்திலும் மதுரையில் இருந்து சென்னைக்கு போக்குவரத்து இருக்கிறது. அதில் துவரங்குறிச்சியில் இருந்து மதுரை வருவதற்கான தூரம் 71 கிலோ மீட்டர் ஆகும். இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் (25.5கிலோ மீட்டர்), நத்தத்தில் இருந்து மதுரை (35.5 கிலோ மீட்டர்) வழியாக உள்ள சாலையை நான்குவழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான மொத்த பயண தூரம் 61 கிலோ மீட்டர். 10 கிலோ மீட்டர் அளவுக்கு தூரம் குறைவதால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை - நத்தம் சாலை ஒரு பிரிவாகவும், நத்தம் -துவரங்குறிச்சி சாலை ஒரு பிரிவாகவும் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
மகிழ்ச்சி
அதில் மதுரை-நத்தம் சாலையின் தூரமான 35.5 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மதுரை மாநகர பகுதிகளில் வருகிறது. இங்கு நான்குவழிச்சாலையாக மாற்றினாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலை இருந்தது. எனவே இந்த 7 கிலோ மீட்டர் தூரத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது மதுரை-ஊமச்சிகுளம் வரையிலான மேம்பாலம் ரூ.544 கோடியிலும், அங்கிருந்து நத்தம் வரையிலான சாலையிலான நான்குவழிச்சாலை ரூ.600 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு முடிக்க வேண்டிய திட்டப்பணிகள், கொரோனா காரணமாக தாமதமானது. தற்போது மதுரை-நத்தம் இடையேயான நான்குவழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்து உள்ளது. எனவே வருகிற 8-ந் தேதி இந்த சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சென்னையில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை-நத்தம் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சோதனை அடிப்படையில் நேற்று போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் மேம்பாலத்தில் பயணம் செய்தனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
போக்குவரத்து நெருக்கடி குறையும்
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த சரவணன்:-
மதுரையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகவே உள்ளது. இந்த போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மதுரையின் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு, பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் புதிதாக மதுரையிலிருந்து நத்தம் வரை 35 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வாகன ஓட்டிகளின் வசதிக்காக அந்த பாலம் திறந்து விடப்பட்டது. அதில் சென்று வந்த அனுபவம் புதிய அனுபவமாக இருந்தது. சாலை முழுவதுமாக திறக்கப்பட்டால் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு ஏற்படும். பயண நேரம் குறைவும்.
பயண நேரம் குறையும்
மதுரையை சேர்ந்த செல்வகுமார் :-
இந்த பாலம் தமிழகத்திலேயே மிக நீண்ட பலமாக கட்டப்பட்டிருப்பது மதுரை மக்களுக்கு பெருமையான விஷயம். இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கிலோமீட்டர் பயண தூரம் குறையும். இதை போல் இந்த பாலத்தின் வழியாக சென்னை செல்வோருக்கு பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதாக கூறப்படுகிறது. அது மதுரைக்கு மேலும் பெருமையாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.