கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து தொடங்கியது
மாயாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், கூடலூர்-மசினகுடி இடையே 1 வாரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
மாயாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், கூடலூர்-மசினகுடி இடையே 1 வாரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
தரைப்பாலம் மூழ்கியது
கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கூடலூரில் இருந்து முதுமலை தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. மேலும் மாயாறு குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து கனமழை பெய்ததால் பைக்காரா உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணைகள் திறக்கப்பட்டது. இதனால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இயக்குவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மசினகுடி ஊராட்சி மக்கள், மாணவர்கள் கூடலூருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து தொடங்கியது
இதனால் சுற்றுலா தொழில் உள்பட அனைத்து வணிகமும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் குறைந்து விட்டது. கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் காணப்படுகிறது. தொடர்ந்து ஆறுகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்து உள்ளது. இதேபோல் மாயாற்றிலும் நேற்று தண்ணீர் வரத்து குறைந்து தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதைதொடர்ந்து 1 வாரத்துக்கு பிறகு காலை 8 மணிக்கு கனரக வாகனங்கள் முதற்கட்டமாக இயக்கப்பட்டது.
பின்னர் மதியம் 12 மணிக்கு தண்ணீர் வரத்து மேலும் குறைந்தது. தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்க போலீசார், வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்கள் வாகனங்களில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இதுகுறித்து மசினகுடி மக்கள் கூறும்போது, ஒரு வாரமாக கூடலூர் உட்பட வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது. மேலும் சுற்றுலா பயணிகள் வர முடியாததால் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது என்றனர்.