விபத்தை தடுக்க போக்குவரத்து-நெடுஞ்சாலை ரோந்துபோலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்தை தடுக்க போக்குவரத்து-நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வழங்கினார்.

Update: 2023-04-22 20:11 GMT

பாதுகாப்பு உபகரணங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபகரணங்கள் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி சாலை போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் 89, ஒளிரும் பட்டைகள் 25, சோலார் ஒளிரும் விளக்குகள் 32 மற்றும் ஒளிரும் செங்குத்து கூம்புகள் 63 என மொத்தம் 184 முன்னெச்சரிக்கை சாலை பாதுகாப்பு உபகரணங்களை நகர, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கினார்.

இந்த பாதுகாப்பு உபகரணங்கள் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், தேசிய-மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வைக்கப்படவுள்ளது.

விபத்துகள் குறைந்துள்ளது

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது, அதிவேகத்தில் பயணிப்பது, தவறான பாதையில் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றி செல்வது என என பல்வேறு பிரிவுகளில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியதாக 11 ஆயிரத்து 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு இதுவரை நடந்த சாலை விபத்துகளுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் (தனிப்பிரிவு), மதுமதி (நகர போக்குவரத்து), சுப்பையா (நெடுஞ்சாலை போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்