திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம், கடைகள் அடைப்பு
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்-கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்-கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பெரியார் பிறந்தநாள் விழா
பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சியில் மத்திய பஸ்நிலையம் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் மனுதர்ம புத்தகத்தை எரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மனுதர்ம புத்தகத்தை எரித்தால் நாங்கள் பெரியாரின் புத்தகத்தை எரிப்போம் என்று பா.ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர்.
சிலைகளுக்கு பாதுகாப்பு
இதனால் திருச்சி மாநகரில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கக்கூடிய பெரியார் சிலைக்கு அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் மத்திய பஸ்நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்கு தடுப்புகள் வைத்து வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் போலீசார் தடுத்து இருந்தனர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதன்காரணமாக மத்திய பஸ்நிலைய பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் தீயணைப்பு வாகனங்களும், கலவரத்தை கட்டுப்படுத்தும் காவல்துறையின் வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
பயணிகள் அவதி
அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்ததால், பஸ்நிலையத்திற்குள் டவுன் பஸ்கள் வராமல் காமராஜர் சிலை பகுதியிலும், புறநகர் பஸ்கள் மாற்று பாதையிலும் திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.