ஏலகிரி மலையில் போக்குவரத்து பாதிப்பு -சுற்றுலா பயணிகள் அவதி
ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வாகன நெரிசலால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட நேர்ந்தது.
ஒரே சீதோஷ்ண நிலை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரு சீதோஷ்ண நிலை உள்ளதால் இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்குள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லும்போது இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர். இங்கு படகு சவாரி பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று விடுமுறையில் சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்திருந்தனர். கார், இருசக்கர வாகனங்களில் வந்த பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
படகு சவாரி
நேற்று மாலை சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் பார்த்துவிட்டு ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் கொண்டை ஊசி வளைவுகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.