அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

Update: 2022-06-11 20:19 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சரிந்து விழுந்த சாலையால் கணபதி அக்ரகாரம் - அய்யம்பேட்டை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

பழமையான பாலம்

அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. இந்த பாலத்தை மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் வழியே தஞ்சையிலிருந்து இளங்கார்குடி, இலுப்பக் கோரை ஆகிய கிராமங்களுக்கு 2 அரசு பஸ்களும், 3 மினி பஸ்களும் சென்று வந்தன. திருவையாறு - கும்பகோணம் சாலை பகுதியில் உள்ள ஊர்களுக்கு செல்லும் அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த சாலை வழியே தான் சென்று வந்தன.

மேலும் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் இந்த பாலத்தின் வழியே சென்று தான் மாணவ-மாணவிகளை பள்ளி, கல்லூரிக்கு அழைத்து வருகின்றன. வடபகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் இந்த பாலத்தின் வழியே தங்கள் விளை பொருட்களை நகரங்களுக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

சாலை சரிந்து விழுந்தது

இந்த பாலம் பழுதடைந்து போனதால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமானப்பணிகளின் போது பழைய பாலத்தின் வடக்கு புறம் உள்ள சாலை நேற்று மாலை முற்றிலும் சரி்ந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவதியடைந்துள்ளனர். வாகனங்களில் வரும் வடக்கு பகுதி கிராம மக்கள் 30 கி.மீ. சுற்றி பாபநாசம் அல்லது திருவையாறு சென்று தான் அய்யம்பேட்டைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சரிந்து விழுந்த பள்ளத்தில் போர்க்கால அடிப்படையில் மணல் மூட்டைகளை அடுக்கி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்