தற்காலிக சாலை தண்ணீரில் மூழ்கியதால் 40 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
ஒரத்தூரில் தற்காலிக சாலை தண்ணீரில் மூழ்கியதால் 40 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு அதிகாரிகள் துரித நடவடிக்கை
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஒன்றியம் ஒரத்தூர் செல்லும் சாலையில் கொசப்பாளையம் அருகே ஓடையின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல ஓடையில் தற்காலிக சாலை அமைத்து இருந்தனர். கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தற்காலிக சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் ஒரத்தூர் மற்றும் லட்சுமிபுரம், தும்பூர் உள்ளிட்ட சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட கிராம மக்கள் விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி இருந்தது.
இதுபற்றிய தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணா மூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் அனிதா, சாலை ஆய்வாளர் அருள்மொழி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலத்தின் அடியில் இருந்த அடைப்பு மற்றும் மண்மேடுகளை அகற்றினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பாலத்தின் இருபுறமும் உள்ள பள்ளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டி பாலத்தை சாலையுடன் இணைத்தனர். இதன் பின்னர் நேற்று காலை 11 மணி முதல் அங்கு போக்குவரத்து தொடங்கியது.