கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் போக்குவரத்து மாற்றம்-ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு கோடை விழா
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கூடுதல் கலெக்டர் பாலசந்தர் தலைமை தாங்கி பேசினார். அப்போது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் நடத்தப்படும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எந்தெந்த துறையினர், என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. கோடை விழாவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு எந்த பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், ஏற்காடுக்கு வரும் சாலைகளை எந்த நாட்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்து மலைப்பாதை வழியாக ஏற்காட்டுக்கு வரும் வாகனங்கள், வாழவந்தி, கொட்டசேடு, குப்பனூர் மலைப்பாதை வழியாக செல்ல போக்குவரத்தில் மாற்றம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
ஒத்துழைப்பு
சுற்றுலா பயணிகளுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்க, ஏற்காட்டில் பொது இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஊராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூடுதல் கலெக்டர் பாலசந்தர் கேட்டு கொண்டார்.