மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தேர்த்திருவிழா
பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், அதை தொடர்ந்து 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் வெள்ளித்தேர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு வெங்கட்ரமணன் வீதியில் இருந்து 2-ம் நாள் தேர் புறப்பட்டு, சத்திரம் வீதியில் கொண்டு நிறுத்தப்படுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு அங்கிருந்து 3-ம் நாள் தேர் புறப்பட்டு, தேர்நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகம் நடடைபெறுகிறது.
14 கண்காணிப்பு கேமராக்கள்
இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு திருடர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி குற்ற சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து செல்வார்கள். கோவிலை சுற்றியும், தேர் செல்லும் பாதைகளில் 14 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணத்தை மர்ம நபர்கள் திருட கூடும் என்பதால் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து மாற்றம்
தேர்த்திருவிழாவை யொட்டி பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது வழக்கமாக வால்பாறை, ஆழியார் மற்றும் கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள் தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணன் வீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வரும். அந்த வாகனங்கள் ஊத்துக்காடு ரோடு வழியாக உடுமலை ரோட்டை அடைந்து, அங்கிருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். இதை தவிர கடை வீதிக்குள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்ல கூடாது.
இருசக்கர வாகன ஓட்டிகள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். 2-வது நாள் வெங்கட்ரமணன் வீதியில் இருந்து புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் கொண்டு தேர் நிறுத்தப்படும். அப்போது தெப்பக்குளம் வீதி இருந்து வெங்கட்ரமணன் வீதிக்கு வரும் வாகனங்கள் மார்க்கெட் ரோடு வழியாகவும், உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நகருக்கு வாகனங்கள் பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.