போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்
வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தன் முகாமிற்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-வெளி நாடுகளில் தயாரிக்கப்படும் அதிவேக சக்தி கொண்ட வாகனங்கள் இப்போது நமது மாநிலத்திற்கும் வந்து விட்டது. இந்த வாகனங்களை கல்லூரி மாணவ -மாணவிகள் அதிக வேகத்துடன் ஓட்டி வருகின்றனர். இதனால் வாகன விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. வேகத்தை கட்டுப்படுத்தவும் விபத்தை தடுக்கவும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு விட்டது. உரிமம் இல்லாமல் வாகனத்தை சாலையில் ஓட்டக்கூடாது. இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என்று எதுவாக இருந்தாலும் அதற்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஓட்டுநர் உரிமம், வாகன தகுதிச் சான்று, இன்சூரன்ஸ், பெயர் மாற்றம் ஆகியவற்றை நடப்புக் கணக்கு வரை முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். சாலை விதிகளை மதிப்பது போன்றவற்றை கடைப்பிடித்தால் மட்டுமே வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் உரிமம், எல். எல். ஆர். போன்ற சேவைகளுக்கு நேரத்தை வீணடிப்பதை குறைக்க ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கல்லூரி பேராசிரியர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.