விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் போராட்டம்
விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விக்கிரவாண்டி, கோலியனூர், மயிலம், ராதாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். விளை பொருட்களை விழுப்புரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூட சாக்குகளில் மாற்றி எடை போட வேண்டும், நெல் ரகங்களை பிரித்து வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருட்களை கொள்முதல் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படாததால் நெல், மணிலா, உளுந்து உள்பட மொத்தம் 5 ஆயிரம் தானிய மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர். மேலும் அவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தாங்கள் கொண்டு வந்த விளைபொருட்களுடன் காத்துக்கிடந்தனர்.
நடவடிக்கை
இதையடுத்து வியாபாரிகளின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தானிய மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட விற்பனைக்கூட செயலாளர் விஷ்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று நாளை (அதாவது இன்று) முதல் விளை பொருட்களை கொள்முதல் செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.