இடமாற்றம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை, இடமாற்றம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-12 14:16 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை, இடமாற்றம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உழவர் சந்தை

கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டது. நாளடைவில் பஸ்கள் இயக்கபடாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் மூடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த மாதம் மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் செயல்பட்டு வரும் 60 கடைகளை அகற்றி விட்டு, அங்கு உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி பேரூராட்சி மன்றத்தில் அவசர கூட்டம் நடத்தி பேரூராட்சிக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய 1 ஏக்கர் நிலத்தை வேளாண் வணிகத்துறைக்கு வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் பரவியது.

முற்றுகை போராட்டம்

இதை அறிந்த வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் திரண்டனர். கோத்தகிரி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன், செயலாளர் லியாகத் அலி, மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் விவேகானந்தன் மற்றும் நிர்வாகிகள், வியாபாரிகள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்பட 21 உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் ஆகியோருக்கு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் சதாசிவம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோத்தர் இன மக்கள் மனு

இதேபோல் புது கோத்தகிரியை சேர்ந்த கோத்தர் இன மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- உழவர் சந்தை அமைக்கப்படும் நிலம் கோத்தர் இன மக்களின் பூர்வீக கோவில் அமைந்து உள்ள பகுதியாகும். கடந்த 1910-ம் ஆண்டு கோத்தகிரியில் இருந்து, புது கோத்தகிரிக்கு கோத்தர் மக்கள் இடமாற்றம் செய்தனர். அப்போது எங்களுக்கு சொந்தமான இடத்தில் பூங்கா, மைதானம் பயன்படுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், நகர வளர்ச்சிக்காக அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால், பழங்குடியினரின் அடையாளம் காணாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே, உழவர் சந்தையை வேறு பகுதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்