திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-06 20:18 GMT

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

150 கிலோ மீன்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள், ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஞானசுந்தரி, பார்வதி, ராஜ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செல்வன், லாரன்ஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள மீன் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள், பார்மலின் என்ற ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடைகளில் இருந்த 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ ரசாயனம் தடவப்பட்ட மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

வியாபாரிகள் வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் வந்தனர். அங்குள்ள கடைகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் ரசாயனம் தடவப்பட்ட மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதனை கண்டுபிடிப்பதற்காக அதிகாரிகள் ஒரு ரசாயன கலவையை மீன்கள் மீது ஊற்றினர். இதைப்பார்த்த வியாபாரிகள், அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் விற்பனை செய்வது நல்ல நிலையில் உள்ள மீன்கள் தான் என்று அதிகாரிகளிடம் கூறினர்.

இதுமட்டுமின்றி அதிகாரிகளிடம் இருந்த ரசாயன கலவையை பிடுங்கிய வியாபாரிகள், தங்களின் கைகளில் அதனை ஊற்றினர். அப்போது அவர்களின் கைகளில் தோலின் நிறம் மாறியது. அதை அதிகாரிகளிடம் காண்பித்து இப்போது எங்கள் கைகள் கெட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

வியாபாரிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தங்களது சோதனையை பாதியில் நிறுத்திவிட்டு மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்