வாடகை பாக்கி செலுத்தாததால் மார்க்கெட் செல்லும் வழியில் தடுப்பு ஏற்படு்த்திய நகராட்சி அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதம்விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால், காய்கறி மார்க்கெட் செல்லும் வழியில் தடுப்பு ஏற்படுத்திய நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-04 20:27 GMT

விருத்தாசலம், 

சீல் வைப்பு

விருத்தாசலம் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி, கடை வாடகை என ரூ.12 கோடிக்கு மேல் வாி பாக்கி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு, பாக்கி வைத்துள்ள கடைகளை பூட்டி சீல் வைத்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ரூ.6 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகள் மற்றும் ஒரு ஓட்டலுக்கு நேற்று நகராட்சி ஆணையர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாக்குவாதம்

இதேபோல் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள 90 கடைக்காரா்கள் சுமார் ரூ.3.50 கோடி வாடகை பாக்கியை பல வருடங்களாக கட்டாமல் இருந்தனா். இதுதொடா்பாக நகராட்சி ஆணையர் சேகர், காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், வியாபாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்கள் வரும் வழியில் நகராட்சி வாகனத்தை நிறுத்தி, வாகனங்கள் செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தினர். இதனால் வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் அதிகாரிகள், காய்கறி வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்துவதாக வியாபாரிகள் ஒப்புக்கொண்டனர். அதன் பேரில் தடையை அகற்றி வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் கூறும்போது, விருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, கடை வாடகை என நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை உள்ளது. அதனை வசூலிப்பதற்கான பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்