வள்ளியூர் போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகை
திருநங்கை தாக்கியதாக புகார் அளித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் யாதவர் தெருவில் திருமண அழைப்பிதழ் கடை நடத்தி வருபவர் மரிய ஆல்டின். இவரது கடைக்கு நேற்று திருநங்கை ஒருவர் வந்து பணம் கேட்டு உள்ளார். அவரிடம் மரிய ஆல்டின் 2 ரூபாய் கொடுத்தார். அப்போது அதை அந்த திருநங்கை மரிய ஆல்டின் மீது வீசி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் எஸ்.ராஜ்குமார், பொருளாளர் ஜோவின் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள், அச்சக உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் திரண்டு வந்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வியாபாரிகளிடம் பேசி சமரசம் செய்தார்.
இதைத்தொடர்ந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் அவசர கூட்டம் சங்க பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வள்ளியூர் வியாபாரிகள் திருநங்கைகளுக்கு எந்தவிதமாக பணமும் கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.