ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினா்.மேலும் விளைபொருட்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
ஆன்லைன் ஏலம்
விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்ய எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் இ-நாம் திட்டத்தின் கீழ் செல்போன் மூலம் ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகளை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
இ-நாம் திட்டத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால் 'கிரேடு' வாரியாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் தரத்தை பிரித்து வழங்கிய பின்பு தான் விலை நிர்ணயம் செய்ய முடியும். உரிய எந்திரங்கள் இருந்தும் தரம் பிரித்து வழங்குவதில்லை. செல்போன் மூலம் விலை நிர்ணயம் செய்ய சிக்னல்கள் சரிவர கிடைக்காது. விளை பொருட்களின் வரத்து அதிகம் இருக்கும் போது கொள்முதல் செய்ய கால தாமதம் ஆகும் என்பதால் செல்போனில் விலை நிர்ணயம் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஏலம் ஒத்திவைப்பு
இந்த நிலையில் நேற்று மீண்டும் வியாபாரிகளை செல்போன் மூலம் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், பழைய முறையிலேயே விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயித்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஏலம் தற்காலிமாக ஒத்திவைக்கப்படுதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே வியாபாரிகள் நடத்திய போராட்டம் காரணமாக விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்ய முடியாமல் தேக்கமடைந்தது. இதனால் விவசாயிகள் அதிகாலை முதல் காத்திருந்தும், விளைபொருட்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் விளை பொருளை கொள்முதல் செய்யக்கோாரி கோஷம் எழுப்பினர்.
நடவடிக்கை
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து விற்பனை கூட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.