செல்போன் மூலம் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்க வியாபாரிகள் எதிர்ப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செல்போன் மூலம் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்க வியாபரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொருடகள் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-07 18:45 GMT

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆண்டு முழுவதும் இயங்கும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் விளை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்கிறார்கள். அதேபோன்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்று பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில், இ -நாம் திட்டத்தின் கீழ் செல்போனில் ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகளை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் வலியுறுத்தியது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

இ-நாம் திட்டத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால் 'கிரேடு' வாரியாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் தரத்தை பிரித்து வழங்கிய பின்பு தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், அதை பின்பற்றாமல், செல்போனில் விலை நிர்ணயம் செய்ய சொல்கிறார்கள். எனவே ஏலத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறி வியாபரிகள் அங்கிருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால், விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்கள் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.அதிகாலை முதல் காத்திருந்தும் பொருட்கள் கொள்முதல் செய்யப்படாததால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் விருத்தாசலம்- கடலூர் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று தீர்வு?

ஆனால், மாலை வரைக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யப்படாததால், மாலையில் மீண்டும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

நேற்று மாலை வரைக்கும் விவசாயிகள் பொருட்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. இன்று(செவ்வாய்க்கிழமை) பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால், விவசாயிகள் அங்கு காத்திருந்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்