போலீஸ்காரரை தாக்கிய வியாபாரி சிறையில் அடைப்பு
கணபதியில் போலீஸ்காரரை தாக்கிய வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
கணபதி
கோவையை அடுத்த சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் (வயது 45) என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ரவிக்குமார் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின்பேரில், போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் தன்னையும், தாயையும் தனது தந்தை முருகன் (52) அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். இதன்பேரில், ரவிக்குமார் பழவியாபாரியான முருகனிடம் விசாரணை நடத்த சென்றார்.
அப்போது குடிபோதையில் இருந்த முருகன், போலீஸ்காரர் ரவிக்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கோவை சிறையில் அடைத்தனர்.