திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையை சேர்ந்தவர் ரிங்கிள் (வயது 40), காய்கறி வியாபாரி. இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரிங்கிளுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு அவருக்கு மது அருந்தும் போது மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவரை நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மேரி ஜின்சிரா அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு டாக்டர் இ்ல்லாததால் வீடு திரும்பினர்.
வீட்டின் அறையில் ரிங்கிளும், ஹாலில் மேரி ஜின்சிராவும் படுத்து தூங்கினார்கள். நேற்று அதிகாலையில் மேரி ஜின்சிரா எழுந்து பார்த்த போது அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் ரிங்கிள் தூக்கு மாட்டி கொண்டு தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் துப்பட்டாவை அறுத்து ரிங்கிளை கீழே இறக்கி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ரிங்கிள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.