டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

திட்டக்குடி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-06-13 18:45 GMT

திட்டக்குடி

கோவில் திருவிழா

திட்டக்குடி தாலுகா நெய்வாசல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் பாலமுருகன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் பங்கேற்க, அவர் நெய்வாசலுக்கு வந்திருந்தார். இதேபோன்று, அதே தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சதீஷ்குமார் (25). டெம்போ டிரைவராக இருந்தார்.

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்

சொந்த வேலை காரணமாக, நேற்று காலை மோட்டார் சைக்கிளில் இருவரும் திட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். ஆவினங்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் கல்லூரி பஸ் ஒன்று சென்றது.

அப்போது, பஸ்சை சதீஷ்குமார் முந்திச்செல்ல முயன்றார். இந்நிலையில் திடீரென எதிரே டிராக்டர் ஒன்று வந்தது. இதில், எதிர்பாராதவிதமாக டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரைவர் மீது வழக்கு

மேலும், படுகாயங்களுடன், உயிருக்கு ஆத்தான நிலையில் இருந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் செல்வராஜ் (62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்