திருக்கோவிலூர் அருகே சரக்கு வாகனம் மீது டிராக்டர் மோதல்; 2 பெண் தொழிலாளர்கள் பலி அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி

திருக்கோவிலூர் அருகே சரக்கு வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்களுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-05-01 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம்(வயது 40). இவர் ஜல்லி கான்கிரீட் போடும் மேஸ்திரி ஆவார். இவர் நேற்று முன்தினம் சொறையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கான்கிரீட் போடும் பணிக்காக சொந்த ஊரில் இருந்து தனது மனைவி லட்சுமி(35) உள்ளிட்ட 13 பேரை சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்த பிறகு மீண்டும் அனைவருக்கும் அதே சரக்கு வாகனத்தில் கான்கிரீட் போடும் எந்திரங்களுடன் வீரபாண்டி கிராமம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருக்கோவிலூர் வேட்டவலம் சாலையில் நாயனூர் ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக மரக்கட்டைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது மோதியது.

2 பெண்கள் பலி

இதில் சரக்கு வாகனத்தில் வந்த லட்சுமி, கணேசன் மனைவி சுமதி(32) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மற்ற 11 தொழிலாளர்களும் காயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் லியோசார்லஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான லட்சுமி, சுமதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி அஞ்சலி

இந்த நிலையில் விபத்தில் பலியான லட்சுமி, சுமதி ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வீரபாண்டி கிராமத்திற்கு நேரில் சென்று லட்சுமி, சுமதி ஆகியோரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 2 பேரின் குடும்பங்களுக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியையும் வழங்கினார். அப்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், மணம்பூண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் அ.சா.ஏ.பிரபு, விழுப்புரம் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வீரபாண்டி நடராஜன், அவைத்தலைவர் சக்திசிவம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனா். 

Tags:    

மேலும் செய்திகள்