ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கற்கால இரும்பு உருக்கு உலையின் தடயம் கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமையான இரும்பு உருக்கு உலையின் தடயத்தை தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

Update: 2022-06-30 18:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமையான இரும்பு உருக்கு உலையின் தடயத்தை தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இரும்பு கழிவுகள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமம் காவல்தோப்பு பேச்சியம்மன் கோவில் எதிரில் தொல்லியல் தடயங்கள் இருப்பதாக மங்காபுரம் முத்துராஜ் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல் குண்டு ஆகியவை சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது. இவை பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் ஆகும்.

சுடுமண் குழாய்கள்

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையாக கிடைக்கும் இரும்புத் தாதுக்களை, உருக்கு உலைகள் மூலம் உருக்கி, இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். இதனால் பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பர். வெங்கடேஸ்வரபுரத்தில் இரும்புத் தாதுக்கள், கழிவுகளுடன், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன. கல் சுத்தியலின் மேற்பகுதியில் வட்டமாக பள்ளம் பதிந்துள்ளது.

இரும்புத் தாதுவை கல் சுத்தியல் கொண்டு சிறியதாக உடைத்து ஊது உலையிலிட்டு உருக்கி இரும்பைப் பிரித்தெடுத்துள்ளனர். இத்தாதுக்களை உருக்க, அதிக வெப்பம் தேவை என்பதால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளைகள் கொண்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இங்கு நீள்வட்ட வடிவிலான இரு சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன.

பழமையானது

ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் இயற்கையான இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றன. இதனால் இப்பகுதிகளில் கற்கால நினைவுச் சின்னங்களுடன் இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மோதூர் அகழாய்விலும் கிடைத்துள்ளது. மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த மாதிரிகளின் காலக்கணிப்புகள் மூலம் தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருந்தனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் தொல்பொருட்கள் மூலம் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அகழாய்வு மூலம் அரசு இதை வெளிக்கொணரவேண்டும்.

மேலும் இருமல், பாம்புக்கடி, நீரிழிவு ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படும் கொக்கிமுள் ஆதண்டை என்ற அரியவகை மூலிகைத் தாவரம் இவ்விடத்தில் இயற்கையாக வளர்ந்து வருகிறது. இதன் தெற்கில் 300 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல் வட்டம், கல் திட்டை ஆகியவை சிதைந்த நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்