உடைந்த கற்கள், கம்பிகளால் சுற்றுலா பயணிகளுக்கு ரத்த காயம்
திற்பரப்பு அருவியில் உடைந்த கற்கள், கம்பிகளால் சுற்றுலா பயணிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டு வந்ததால் அதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அருவி பகுதியை சீரமைக்கும் பணி தொடங்கியது.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் உடைந்த கற்கள், கம்பிகளால் சுற்றுலா பயணிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டு வந்ததால் அதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அருவி பகுதியை சீரமைக்கும் பணி தொடங்கியது.
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மாவட்டத்தில் தற்போது மழை குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.
இந்தநிலையில் அருவியில் தண்ணீர் பாயும் இடத்தில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுடன் காணப்படுகிறது. மேலும் தடுப்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உடைந்து, குறுக்கு நெடுக்காக நீண்ட வண்ணம் காணப்படுகிறது.
ரத்த காயங்கள்
இவை குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகளின் கை, கால்களை பதம்பார்த்து வருகின்றன. குறிப்பாக கம்பிகள் துருபிடித்து உடைந்து குறுக்கும் நெடுக்காக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கைகளையும், உடைகளையும் கிழித்து விடுகின்றன. இதனால் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் ரத்த காயங்களுடன் திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகத்துக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய காங்கிரீட் தளம் அமைத்து அருவி பகுதியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
சீரமைப்பு பணி...
இதற்கு முதற்கட்டமாக அருவி பகுதியில் உடைந்த தளத்தை எந்திரம் மூலம் பெயர்த்து அப்புறப்படுத்தும் வேலை நேற்று தொடங்கியது. மேலும் துருபிடித்து உடைந்த நிலையில் உள்ள கம்பிகள் மாற்றப்படுகிறது.
இந்த பணிகளையொட்டி அருவி பகுதியில் பாய்ந்து செல்லும் தண்ணீர் திசை மாற்றி விடப்பட்டது. சீரமைப்பு பணி தாமதமாக தொடங்கினாலும், இப்போதாவது தொடங்கினார்களே என சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் திற்பரப்பு அருவி பகுதியில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடத்தப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருந்தார். அந்த பணியை உடனே தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.