விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் நேற்று விவேகானந்தர் மண்டபத்தை 2 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் நேற்று விவேகானந்தர் மண்டபத்தை 2 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அங்கு கூட்டம் அலைமோதும்.
அதன்படி வாரவிடுமுறை நாளான நேற்று அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரை பகுதியில் திரண்டு ஆர்வத்துடன் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். அப்போது ஆர்வமிகுதியில் பலர் அந்த காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்ததை காண முடிந்தது.
2 மணி நேரம் காத்திருந்து...
பின்னர் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண படகுத்துறைக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வழக்கமாக படகுத்துறையில் இருந்து 3 படகுகள் இயக்கப்படும். இதில் ஒரு படகு பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டது.
எனவே சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வாட்டி வதைத்த வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் படகில் உற்சாகமாக பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு ரசித்தனர்.
இதேபோல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் கடற்கரையின் இதமான காற்றை அனுபவிக்க ஏராளமானோர் திரண்டனர்.