ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று கண்டு களித்து மகிழ்ந்தனர்.
ஏலகிரி மலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர்.
இந்தநிலையில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஏலகிரி மலைக்கு அதிக அளவில் வருகை புரிந்தனர்.
கூட்டம் அலைமோதியது
இதனால் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று திரும்பும்போது நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.