அரசு பஸ் வராததால் சுற்றுலா பயணிகள் அவதி
ஏலகிரி மலையில் அரசு பஸ் வராததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்திருந்தனர். ஏலகிரி மலைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணிக்கு ஏலகிரி மலையில் இருந்து திருப்பத்தூர் செல்ல வேண்டிய அரசு பஸ் வரவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். அதன்பிறகு வந்த அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக சென்றனர்.