திண்டுக்கல் மலைக்கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி திண்டுக்கல் மலைக்கோட்டையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அவர்கள் வரலாற்று சுவடுகளை பார்த்து ரசித்தனர்.
காணும் பொங்கலையொட்டி திண்டுக்கல் மலைக்கோட்டையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அவர்கள் வரலாற்று சுவடுகளை பார்த்து ரசித்தனர்.
பொங்கல் விடுமுறை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் தொடர்விடுமுறை விடப்பட்டது. இதனால் திண்டுக்கல் மக்கள் பொங்கல் பண்டிகை விடுமுறையை உற்சாகமாக கழித்தனர். இதையொட்டி ஏராளமானோர் பழனி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதுதவிர கொடைக்கானல், சிறுமலை போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று இயற்கை எழில்சூழ்ந்த இடங்களை கண்டுகளித்தனர். இதுதவிர பொங்கல் பண்டிகைக்கு அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாகின. எனவே தியேட்டர்களுக்கு சென்று திரைப்படங்களை பார்த்து ரசித்தனர்.
மலைக்கோட்டை
இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான நேற்று சுற்றுலா இடங்களுக்கு மக்கள் அதிக அளவில் சென்றனர். அதன்படி திண்டுக்கல்லின் வரலாற்று சின்னமாக திகழும் மலைக்கோட்டைக்கு காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என சாரை, சாரையாக சுற்றுலா பயணிகள் வந்தனர்.
மலைக்கோட்டையில் இருக்கும் பழமையான அபிராமி அம்மன் கோவில், குளங்கள், பழங்கால சிறைச்சாலை, பீரங்கி உள்ளிட்ட வரலாற்று சுவடுகளை கண்டுகளித்தனர். மேலும் மாலை நேரத்தில் பாறை, ஆங்காங்கே இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து மாலைநேர சூரியனை ரசித்தனர்.
மேலும் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள குமரன் பூங்காவிலும் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் திரண்டனர். சறுக்கு, ஊஞ்சல், ராட்டினம் ஆகியவற்றின் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.