விடுமுறையை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!
தொடர் விடுமுறையை முன்னிட்டு குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
திருவட்டார்,
கல்வி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது. திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் வருகையால் திணறியது.
நேற்று முதல் குமரி மாவட்ட சுற்றுலாதலங்களில் பெருமளவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இன்று கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு, மாத்தூர் தொட்டி பாலம், முட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுபயணிளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து இன்று திற்பரப்புக்கு படை எடுத்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று டிக்கெட் எடுத்து குதூகலத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஏராளமான வாகங்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால் அவர்கள் வந்த வாகனங்களால் திற்பரப்பில் கடும்போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும்போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த போதிய பணியாட்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கடும்சிரமத்துக்கு ஆளாகினர்.