மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Update: 2023-04-14 19:43 GMT

மேட்டூர்:-

தமிழ் புத்தாண்டையொட்டி மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழ் புத்தாண்டு

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேட்டூருக்கு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில பொதுமக்களும் சுற்றுலா வந்து செல்கிறார்கள். நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூரில் குவிந்தனர். அவர்கள் அணையின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் அணையை ஒட்டியுள்ள பூங்காவுக்கு குடும்பத்தினருடன் சென்று மகிழ்ந்தனர்.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் பூங்காவில் மரத்தின் நிழல்களில் அமர்ந்து உணவு உண்டு, இளைப்பாறினர். சிறுவர்-சிறுமிகள் அங்குள்ள ஊஞ்சள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி, உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

கோவில்களில் வழிபாடு

இதனிடையே தமிழ் புத்தாண்டு என்பதால் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில், தங்கமாபுரிபட்டினம் தங்கமலை முருகன் கோவில், மேட்டூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், மேட்டூர் ஆர்.எஸ். காளியம்மன் கோவில், காவிரி கிராஸ் முனியப்பன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்