திற்பரப்பு அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். தடுப்பணையில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

Update: 2022-11-27 18:45 GMT

திருவட்டார்:

விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். தடுப்பணையில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

திற்பரப்பில் குவிந்தனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் வருகை தரும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

விடுமுறைநாளான நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருகை தந்தனர். அங்கு ஆசைதீர அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அருவியின் அருகில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, பச்சை பசேலென காட்சியளிக்கும் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை ரசித்தனர்.

படகு சவாரி

தற்போது கோதையாற்றியில் தண்ணீர் வரத்து மிதமாக வருவதால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்தனர். அப்போது பலர் படகில் அமர்ந்து பயணம் செய்ததோடு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

சபரிமலை சீசன் காலம் என்பதால் சபரிமலைக்கு சென்று விட்டு குமரி மாவட்டத்துக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் தவறாமல் திற்பரப்பு அருவிக்கும் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் அருகில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை காண முடிந்தது. அதிகளவில் வாகனங்கள் திற்பரப்புக்கு வந்ததால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாத்தூர் தொட்டிப்பாலம்

இதேபோல் ஆசியாவிலேயே மிகவும் நீளமான, உயரமானது என்ற சிறப்பை பெற்ற மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

அங்கு குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசி, நுங்கு ஆகியவற்றை வாங்கி ருசித்தனர்.

இதேபோல் பேச்சிப்பாறை அணை, சிதறால் மலைக்கோவில், முட்டம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்ததை காண முடிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்