ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-05-16 20:15 GMT

ஊட்டி

ஊட்டி ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ரோஜா கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி நடத்தப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ஊட்டியில் 18-வது ரோஜா கண்காட்சி 13-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியில் 35 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு 29 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டது. மேலும் மட்டைப்பந்து, இறகு பந்து, ஆக்கி, கால்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்களும் வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மேலும் குழந்தைகளை கவரும் வகையில் 55 ஆயிரம் ரோஜா பூக்களை கொண்டு யானை, முயல் போன்ற விலங்குகளின் உருவம், மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு, ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனது குறித்த அலங்காரங்கள் இடம்பெற்று உள்ளது. ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. கண்காட்சியில் ரோஜா செடிகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் 16 பேருக்கு சுழற்கோப்பை, 36 பேருக்கு முதல் பரிசு, 22 பேருக்கு இரண்டாம் பரிசு, 51 பேருக்கு சிறப்பு பரிசை வழங்கினார். இந்தநிலையில் ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் நேற்று முன்தினத்துடன் முடிவடைய இருந்த ரோஜா கண்காட்சி, இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. ரோஜா கண்காட்சியை நேற்று வரை 65 ஆயிரம் பேர் கண்டு ரசித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்