ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உறைபனியை நேரில் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Update: 2023-01-16 18:45 GMT

ஊட்டி, 

பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உறைபனியை நேரில் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பொங்கல் விடுமுறை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் காலையில் தொடங்கி மதியம் முடிந்து விட்டது. மதியத்திற்கு பின்னர் சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு, பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

படகு சவாரி

அலங்கார செடிகள், செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். இத்தாலியன் பூங்கா மேல் பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் உள்ள பல வகையான கள்ளி செடிகளை பார்வையிட்டனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பின்னர் மிதி படகு, துடுப்பு படகுகள், மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை கோத்தகிரி மற்றும் கூடலூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஊட்டியில் இருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளிமாவட்டங்களுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

உறைபனியை பார்க்க ஆர்வம்

கடந்த 2 வாரங்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அதிகாலையில் புல்வெளிகள் மீது வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. அவலாஞ்சியில் பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சென்று விட்டது. நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஊட்டியில் நிலவும் பனிக்காலம் குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

ஈரோட்டை சேர்ந்த தம்பதி அருண்ராஜ்-சரண்யா:-

பொங்கலையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால், ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். இங்கு வருவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக உறைபனி தாக்கம் காணப்படுவது குறித்து தெரிந்துகொண்டோம். இதனால் உறைபனி காலநிலையை அனுபவிப்பதற்காகவும், நேரில் பார்ப்பதற்காகவும் இங்கு வந்துள்ளோம். இங்கு பகல் நேரத்தில் நன்றாக வெயில் அடிக்கிறது. ஆனால், மாலை 6 மணிக்கு பின்னர் கடும் குளிர் நிலவுவதால், தங்கும் அறையை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இது ஒரு புது அனுபவமாக உள்ளது.

கண்டு ரசிக்க ஆசை

கோவையை சேர்ந்த பரணிதரன்:-

ஊட்டியில் உறைபனி சீசன் காலங்களில், வெம்மை ஆடைகளை அணிந்து வெளியே செல்வது ஒரு தனி சுகம். ஆனால், எல்லோராலும் அவ்வாறு சென்று விட முடியாது. உறைபனியை கண்டு ரசிப்பதற்காக நான் நண்பர்களுடன் ஊட்டிக்கு வந்து உள்ளேன். அதிகாலை நேரத்தில் உறைபனி தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை அருகில் உள்ள புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது உள்ள உறைபனியை பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால், என்னுடன் வந்த நண்பர்கள் சிலர், காய்ச்சல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், வெயில் வந்த பின்னர் தான் வெளியே வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்