ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-29 20:30 GMT

ஊட்டி

ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த மாநிலத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விடுமுறையை கழிக்க குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அவர்களை வரவேற்கும் வகையில் நுழைவுவாயில் பகுதியில் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அங்கு கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்கள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

குதிரை சவாரி

ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மேடையில் நின்ற படி ஏரியின் அழகை பார்வையிட்டனர். இதற்கிடையே மதியம் பரவலாக மழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ½ மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் படகுகள் இயக்கப்பட்டன.

படகு இல்ல சாலையில் குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலை மற்றும் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, தாவரவியல் பூங்கா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்