தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தீபாவளி என தொடர் விடுமுறையின் காரணமாக இன்று சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
புதுச்சேரியிலும் தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர் விடுமுறை விடப்பட்டதால் அம்மாநில மக்களும் அதிகளவில் சுற்றுலா வந்திருந்ததை காண முடிந்தது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜ வீதி போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.