கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் முடிவடைந்த நிலையில் தற்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. வாரவிடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கொடைக்கானலில் குவிந்தனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பேரிஜம், பில்லர் ராக்ஸ், குணா குகை போன்றவற்றை கண்டுகளித்ததுடன் நகர் பகுதியில் உள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் பொழுதை போக்கினர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழையும், அதைத்தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மயிலாடும்பாறை என்னுமிடத்தின் அருகே பலத்த காற்றுக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மரங்களை வெட்டி அகற்றினர்.
வெள்ளி நீர்வீழ்ச்சி
பலத்த மழைக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மழை காரணமாக பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. சாலை ஓரங்களில் சிலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
சுற்றுலாப்பயணிகளின் தொடர் வருகை காரணமாக பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் தற்போது பரவி வருவதால், கொடைக்கானல் நகருக்கு அதிக அளவில் வருகை தரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.