கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் குளு, குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். சாரல் மழையில் நனைந்து அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
குளு, குளு சீசன்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். வாரவிடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவியது. இதனை அனுபவித்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்தனர்.
தரையிறங்கிய மேககூட்டம்
சுற்றுலா பயணிகளின் மகிழ்விக்கும் வகையில், அவ்வப்போது மேகக்கூட்டங்கள் தரையிறங்கி மலை முகடுகளை முத்தமிட்டு தவழ்ந்து சென்றன. இந்த காட்சியை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நேற்று பகல் 1 மணி முதல் பகல் 3 மணி வரை நகரின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
சாரல் மழையில் நனைந்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். வனப்பகுதியில் உள்ள மோயர்பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை மற்றும் ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர்.
பின்னர் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
யானைகள் நடமாட்டம்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை அலுவலகத்தில் அதற்குரிய கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு வாங்க வேண்டும். அதன் பின்னரே சுற்றுலா வாகனங்களுக்கு வனப்பகுதியில் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வனத்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கொண்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல நுழைவுவாயில் பகுதியில் தயாராக இருந்தனர்.
இதற்கிடையே பேரிஜம் ஏரி பகுதியில் 3 காட்டுயானைகள் நடமாடுவதை வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது. மேலும் பேரிஜம் ஏரியில் திடீரென காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். இதன் காரணமாக வார விடுமுறையில் ஆர்வத்துடன் சென்ற சுற்றுலாப்பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தை அவ்வப்போது கண்காணித்து முன்கூட்டியே வனத்துறையினர் அறிவிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.