வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள்

முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-24 18:45 GMT

கூடலூர், 

முதுமலை சாலையில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தொடர்ந்து குளுகுளு காலநிலையோடு, கோடை சீசன் தொடங்கி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். மேலும் ரம்ஜான் நோன்பு காலம் முடிவடைந்து விட்டதால் கேரளா, கர்நாடகாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் வருகிறது.இதனால் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் ஊசிமலை காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் முதுமலை சாலையில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். மேலும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வனவிலங்குகளுக்கு இடையூறு

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலைகளில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கேரளா-கர்நாடகாவில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகின்றனர். வனவிலங்குகளை காண வனத்துறை சார்பில் வாகன சவாரி அழைத்து செல்லப்படுகிறது. இதன்மூலம் வனவிலங்குகளை கண்டு ரசிக்க வருகிறார்கள். ஆனால், விதிமுறையை மீறி சாலையில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்