அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அகஸ்தியர் அருவி
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் அகஸ்தியர் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மழை
இதற்கிடையை பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து. மதியம் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதேபோல் பாபநாசம், அம்பலவாணபுரம், சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
அம்பலவாணபுரம் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் மழைநீர் பெருகி, அம்பையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் கழிவு நீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.